வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பாட்டாளி இளைஞர்களுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவுரை!!
  
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், அதை திமுகவும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற உண்மையை அறியாதது தான் அக்கூட்டம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு   வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு  எவ்வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்த வில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.


தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம். தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.


1980-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக, ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் அடங்கியக் கூட்டணியை திமுக -காங்கிரஸ் கூட்டணி  வீழ்த்தியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 இடங்களில் 37 இடங்களை திமுக அணி கைப்பற்றியது. அதிமுகவுக்கு கோபிச்செட்டிப்பாளையம், சிவகாசி ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. திமுக அணி இப்போது வாங்கியதை விட அதிகமாக 1980-ஆம் ஆண்டில் 55.89% வாக்குகளைப் பெற்றது. எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அணிக்கு 40.15% வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அது தான் தேர்தல் அரசியலில் எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் தோல்வி... கடைசி தோல்வியும் அதுதான்.


ஆனால், அதை புரிந்து கொள்ள முடியாத திமுக- காங்கிரஸ் கூட்டணி, அதிமுகவுக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டதாக கூத்தாடியது. எம்ஜிஆர் அரசை கலைக்க வேண்டுமென திமுக வலியுறுத்தியது.  அதன்படியே எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவதாக திமுக கனவு கண்டது. ஆனால், அத்தேர்தலில் திமுக 37 இடங்களில் மட்டுமே பிடித்து தோல்வியடைந்தது. மாறாக, ஆட்சி கலைக்கப்பட்ட 3 மாதங்களில் அதிமுக 129 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது.


அதேபோல், 1989-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதிமுக உடைந்ததைப் பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதே ஆண்டு நவம்பரில் நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களில் திமுக அணி தோல்வியடைந்தது. அதுமட்டுமல்ல.... இப்போது வெற்றி பெற்றுள்ள திமுக அணி, 2014 மக்களவைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வியதையும், அத்தேர்தலில் திராவிடக் கட்சிகளின் துணையில்லாமல் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வென்றதையும் யாரும் மறந்துவிட முடியாது. இந்த வரலாறுகளை நான் பட்டியலிடுவதன்  நோக்கம், மக்களின் நம்பிக்கையைப் பெற்றால் அடுத்த சில மாதங்களிலேயே தமிழக அரசியல் சூழலை  தலைகீழாக மாற்றிவிட முடியும் என்ற சாத்தியமான நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.


‘‘விழுவதல்ல தோல்வி. வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி’’ என்பது நம்பிக்கை மொழி. எவ்வளவு வேகமாக விழுந்தாலும், விழுந்த வேகத்தில் எழுந்து ஓடி வெற்றிக்கோட்டைக் கடப்பது பாட்டாளிகளின், குறிப்பாக பாட்டாளி இளைஞர்களின் இரத்தத்தில் ஊறிக் கிடக்கும் வழக்கமாகும். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று பாட்டாளி இளைஞர்கள் தீர்மானித்து விட்டால், அடுத்த மாதமே தேர்தல் வந்தாலும் அதில் எதிரணிகளை வீழ்த்தி வெற்றிகளை குவிக்க முடியும். இது சாத்தியமானது தான்.


தமிழ்நாட்டிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான். மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட சித்திரை முழுநிலவு திருநாளாக இருந்தாலும், வண்டலூரில் 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாடாக இருந்தாலும், சேலத்தில் தொடங்கி விழுப்புரம் வரை நடத்தப்பட்ட 8 மண்டல மாநாடுகளாக இருந்தாலும் அவற்றில் பங்கேற்றவர்களில் 90 விழுக்காட்டினர் இளைஞர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் வேராகவும்,  மரமாகவும் அனுபவம் மிக்க மூத்தவர்கள் திகழும் நிலையில், அதன் கிளைகளாகவும், இலைகளாகவும், மலர்களாகவும், கனிகளாகவும் நிறைந்திருப்பவர்கள் இளைஞர்கள் தான் என்பதில் எனக்கு எப்போதும் ஐயம் ஏற்பட்டதில்லை. இனிவரும் காலங்களிலும் அத்தகைய ஐயம் எனக்கு ஒருபோதும் ஏற்படாது.


பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு. இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம். இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக் காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.


பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்..... புதிய வரலாறுகளை படைக்க வேண்டும். இளைஞர் படையை புதிய எழுச்சியுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்று நடத்துவார். உங்களை வழி நடத்த நான் எப்போதும் களத்தில் காத்துக் கொண்டிருப்பேன்.