ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும்- ஓபிஎஸ்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
புதுடெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
ஜல்லிக்கட்டு தடை விடிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
3-வது நாளாக தொடரும் போராட்டங்களில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்று இருக்கும் நிலையில், பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று சந்தித்து இப்பிரச்னை குறித்து விவாதித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடிதம் மூலமாக பிரதமரை கேட்டிருந்தேன்.
இதற்காக சந்திக்கவும் நேரம் ஒதுக்க கேட்டிருந்தேன். தமிழகத்தில் இரண்டு பருவமழை மூலம் கிடைக்க வேண்டிய மிகக்குறைந்தளவே நமக்கு கிடைத்தது.
வறட்சி குறித்தும் பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோரப்பட்டுள்ளது. போதுமான நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழர் உணர்வுகளை நன்றாக அறிந்துள்ளேன். அதனை மதிக்கிறேன். இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். பொறுமையாக இருங்கள் நல்லதே நடக்கும். நன்மையே யாவும்!! நன்மையாய் முடியும்!! என்றார்.