தமிழகத்தில் ஏர்செல் நிறுவன சேவை முடங்கியுள்ளதாக கூறி கோவை, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி உட்பட பல பகுதிகளில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்செல் டெலிக்காம் நிறுவனம், மிகப் பெரிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஜியோவில் அதிரடி வருகைக்குப் பிறகு, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற சேவை நிறுவனங்கள் போட்டியைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் எனும் மலேசிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கடன் நெருக்கடியில் சிக்கிய ஏர்செல் நிறுவனத்தின் சேவையைத் தொடர்வதற்காகப் பல கோடி ரூபாயை முதலீடு செய்தார் அந்நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன்.


அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமல் போனதால், தனது நிறுவனத்தைத் திவால் என்று அறிவித்து, சேவையை நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.


அதனால், இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.


அதுமட்டுமின்றி, ஏர்செல் சேவையைப் பயன்படுத்தி வருகின்ற கோடிக்கணக்கான மக்களும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், எந்த முன்னறிவிப்பும் தரப்படாமல், ஏர்செல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன


இந்நிலையில், கோவையில் ஏர்செல் நிறுவன சேவை முடங்கியுள்ளதாக கூறி வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.


மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி உட்பட பல பகுதிகளில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.