சந்திரயானுக்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்: பிரதமர்
முக்கியமான இந்த தருணத்திற்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என சந்திரயான் 2 குறித்து பிரதமர் மோடி ட்வீட்.
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. படிப்படியாக பல சுற்றுப்பாதைகளை கடந்து சந்திரயான் 2-விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இறங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. நாளை அதிகாலை 1:55 மணி அளவில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இது வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான் 2 படைக்கும்.
சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளதால் உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது. தரையிறங்கும் கடைசி 15 நிமிடங்கள் மிக மிக முக்கியமானது என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் மோடி, முக்கியமான இந்த தருணத்திற்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்போதிலிருந்து இன்னும் சில மணிநேரங்களில், சந்திரயான் - 2 விண்கலம் சந்திரனின் தென் பகுதியில் தரையிறங்க உள்ளது. நமது விண்வெளி விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியாவும் மற்றும் உலக நாடுகளும் மீண்டும் ஒரு முறை பார்க்க உள்ளது எனக் கூறியுள்ளார்.