இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன், பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து நாட்டின் நிலப்பரப்பை ஆய்வு செய்யவும், புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்காகவும் நோவாசர் மற்றும் எஸ்.1-4 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. மொத்தம் 889 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான 33 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு இருளைக் கிழித்துக்கொண்டு பி.எஸ்.எல்.வி. சி.42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.


ராக்கெட் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில், இரு செயற்கைக்கோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.



ராக்கெட் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். போட்டிகள் நிறைந்த விண்வெளி வணிகத்தில் இந்தியா தனது வல்லமையை நிரூபித்துள்ளதாக, அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.