தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. 


1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் மேலும் பலர் தாக்கப்பட்டனர். 


இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். 


சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


இந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி கைது செய்யப் பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இதை எதிர்த்து நாடு முழுவது எதிர்ப்பு கிளம்பியது. 


பின்னர் வீரத்துடன் போராடிய அந்த தோழர்களுக்கு கிடைத்த மரண தண்டனையே முதலாளித்துவத்திற்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணியாக மாறியது. அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாகவும் உழைப்பாளர்கள் கொண்டாடி மகிழும் மே தினமாகவும் இன்று உருவெடுத்து உள்ளது. இந்த தினத்தை கூகுள் நிறுவனம் டூடுலில் வைத்து கொண்டாடியுள்ளது...!