அறிமுகமானது மோட்ரோலாவின் Moto E6; விலை 10,300 மட்டும்!
பேட்டரி திறன்களுக்கு பெயர் போன மோட்ரோலா மொபைல்களின் E-வரிசையில் உருவாகியுள்ள Moto E6 அறிமுகமானது!
பேட்டரி திறன்களுக்கு பெயர் போன மோட்ரோலா மொபைல்களின் E-வரிசையில் உருவாகியுள்ள Moto E6 அறிமுகமானது!
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான மோட்டோ தனது E-வரிசை போன்களில் உருவாகியுள்ள புதிய ஸ்மார்ட்போனான 'Moto E6' அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், புதிய 'Moto E6' ஸ்மார்ட்போனே ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.
நாட்ச் டிஸ்ப்ளே, ஹோல்-பன்ச் போன்ற தற்போதைய ட்ரெண்டை மோட்டோ E6 தவிர்த்து பழைய வடிவிலேயே வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டு முன்பு வெளியான ஸ்மார்ட்போன்களின் தோற்றத்தை போன்றே தோற்றம் கொண்டுள்ளது இந்த புதிய 'Moto E6'.
நீலம் (Navy Blue) மற்றும் கருப்பு (Starry Black) என இரு வண்ணங்களில் சந்தைக்கு வரும் இந்த 'Moto E6' ஸ்மார்ட்போனிற்கு 149.99 டாலர்கள் (சுமார் 10,300 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் வெரிசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் T-மொபைல், பூஸ்ட் மொபைல் என மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.
எனினும் இந்தியாவில் அறிமுகம் ஆவது எப்போது என்ற கேள்விக்கு பதில் இதுவரை இல்லை. அடுத்ததாக கனடாவில் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு வெளியான Moto E5 ஸ்மார்ட்போனிலிருந்து பெரிதும் மாற்றம் இல்லாமலேயேதான் இந்த 'Moto E6' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளது. ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் HD+(720x1440 பிக்சல்கள்) திரை, 18:9 திரை விகிதம், 296ppi திரை அடர்த்தி என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. ஒரே ஒரு சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 435 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு அறிமுகமாகியுள்ளது. ஆனால், ஆசியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டு வசதியுடனே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான ஒரே ஒரு கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G, வை-பை, ப்ளூடூத் v4.2, GPS என அனைத்து வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 149.7x72.3x8.57mm என்ற அளவு கொண்டும் 159 கிராம் எடை கொண்டும் அறிமுகமாகியுள்ளது.