ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்சனையை  தீர்க்க ஏர்டெல் நிறுவனம் முன்வந்து இருக்கிறது. இதனால் ஏர்செல்லின் சிக்னல் பிரச்சனை படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்செல் டெலிக்காம் நிறுவனம், மிகப் பெரிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஜியோவில் அதிரடி வருகைக்குப் பிறகு, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற சேவை நிறுவனங்கள் போட்டியைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


தமிழகத்தில் ஏர்செல் நிறுவன சேவை கடந்த புதன்கிழமை முடங்கியுள்ளதாக கூறி கோவை, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி உட்பட பல பகுதிகளில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் ஏர்செல் சேவை இன்றும் முடங்கியது. இதன் காரணமாக பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஏர்செல் சேவை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள் சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த சிக்னல் பிரச்சனைக்கு தற்போது ஏர்டெல் நிறுவனம் உதவ முன்வந்துள்ளது. ஏர்டெல்லுக்கு சொந்தமான டவரில் இருந்து தற்காலிகமாக சில ஏர்செல் சிம் கார்டுகளுக்கு மட்டும் டவர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை சரியாகும் வரை இந்த முறை கடைபிடிக்கப்படும்.


அதேபோல் நம்பர் மாற்றவும் ஏர்டெல் நிறுவனத்தை அணுகி இருக்கிறது. நிறைய பேர் நம்பர் மாற்ற விண்ணப்பித்து இருப்பதால், ஏர்டெல்லிடம் உதவி கேட்கப்பட்டு இருக்கிறது. ஏர்செல்லில் இருந்து மாறவிரும்புபவர்கள் எளிதாக இனி ஏர்டெல்லுக்கு மாற முடியும்.