விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரயான்-2 -ன் விக்ரம் லேண்டர் கடினமான தரையிறக்கத்திற்குப் பிறகு சந்திர மேற்பரப்பில் நிழலில் ஒளிந்து கொண்டிருப்பதாக தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) தெரிவித்துள்ளது. மேலும், சந்திர மலைப்பகுதிகளில் விண்கலத்தின் துல்லியமான இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.


இந்தியா கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. 48 நாட்கள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-2 விண்கலம் நிலவை நெருங்கியது.


இம்மாத தொடக்கத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி தனியாக பிரிந்தது. இந்த லேண்டர் கருவிதான் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது.


லேண்டர் கருவிக்குள் இருக்கும் ரோவர் மூலம் 15 நாட்கள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். நிலவின் தென்துருவ பகுதியில் லேண்டரை தரை இறக்கும் முயற்சி கடந்த 7-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.


எந்த நாடும் நிலவின் தென் துருவ பகுதியில் இதுவரை விண்கலத்தை தரை இறக்கியது இல்லை. எனவே லேண்டர் தரை இறங்கும் நிகழ்வை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் கடந்த 7-ஆம் தேதி லேண்டரை தரை இறக்கும்போது நிலவில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது.


இதன் காரணமாக லேண்டர் கருவி திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது.


இதனிடையே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். நிலவை சுற்றிவரும் தங்களது விண்கலம் மூலம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். விக்ரம் லேண்டர் திசைமாறி சென்று விழுந்து விட்டதாக கருதப்படும் பகுதியில் உயர்சக்தி கொண்ட கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டது. என்றாலும் லேண்டர் எந்த பகுதியில் விழுந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.