சவால் விடும் லாலுவின் மகன்; சவாலை ஏற்றுக்கொள்வாரா பிரதமர் மோடி?
இந்திய பிரதமர் மோடிக்கு சவால் விட்ட லாலு யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ். சவாலை ஏற்பாரா என மக்கள் எதிர்பார்ப்பு.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் கடந்த செவ்வாய்க்கிழமை, உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "நாம் ஃபிட்டாக இருந்தால் இந்தியா ஃபிட்டாக மாறும்" (#HumFitTohIndiaFit) எனக் கூறியதோடு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து, அவர்களுக்கு பிட்னஸ் சாவல் விடுத்துள்ளார். ஃபிட்னெஸ் சேலன்ஜ் (#FitnessChallenge) என்ற ஹேஸ்டேக் மூலம், இந்தியர்கள் தங்களது உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சவாலை ஏற்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் தான் மத்திய அமைச்சரின் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், தற்போது தனது மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோலியின் சவாலை தான் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மோடியின் சவாலை குறித்து லாலு யாதயின் மகனும் மற்றும் ஆர்.ஜே.டி (Rashtriya Janata Dal) தலைவருவமான தேஜஷ்வி யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்தர மோடிக்கு சவால் விட்டுள்ளார். அவர் கூறியதாவது, "நாங்கள் விராத் கோலியின் சவாலுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம், தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை நடக்காது என்று சத்தியம் செய்ய முடியுமா? நான் சவால் விடுகிறேன். என் சவாலை ஏற்றுக்கொள்வீர்களா மோடி ஜியோ? என ட்வீட் செய்துள்ளார்.
இவரின் சவாலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியுடன் சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.