தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
உள் தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். கோடை மழை தமிழகத்தில் நீடிக்கும்!
தமிழகத்தில் கத்திரிவெயில் துவங்கிய நிலையில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வெயிலுக்கு பயந்து மக்கள் வெளியில் வராமல் மக்கள் வீட்டிற்குள்ளே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கத்திரி வெயிலுக்கு நடுவே பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக கோடை வெயில் தாக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது. திருச்சி மற்றும் திருத்தணியில் மட்டுமே 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. சென்னையிலும் 100 டிகிரிக்கு குறைவாகவே வெயில் அடிக்கிறது.
இதற்கிடையில் அக்னி வெயிலுக்கு நடுவே பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம், திண்டிவனம் பகுதியிலும் கடந்த வாரம் கனமழை கொட்டியது. நேற்றும் திருநெல்வேலி, சிவகங்கை, கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, வானிலை அதிகாரி கூறியது:- தமிழகத்தில் வெயில் அளவு வரும் நாட்களில் படிப்படியாக அதிகரிக்கும். வெப்பச் சலனத்தால் உள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
உள் தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். கோடை மழை தமிழகத்தில் நீடிக்கும். கரூர், திருச்சி, வேலூர், பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் 38 முதல் 40 டிகிரி வரை வெயில் அடிக்கும். சென்னையில் அதிகபட்சம் வெப்ப நிலை 28 டிகிரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.