`டார்ச் லைட்` வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்ததால் பெண் மரணம்!
பீகார் மாநிலத்தின் சாகர்ஸா பகுதியில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு, பீகார் மாநிலத்தின் சஹார்சா எனும் பகுதியில் செயல்பட்டு வரும் சர்தார் மருத்துவமனையில், கடந்த மார்ச் 19-அன்று விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யும் சமயத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியில்லாத காரணத்தால் பெண் ஒருவர் டார்ச் லைட் அடிக்க மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்தச் சம்பவம் குறித்து, சர்தார் மருத்துவமனை அதிகாரிகள் எவ்வித விளக்கங்களையும் முன்வைக்கவில்லை.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் டார்ச் லைட் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த பெண் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் உறவினர்கள் கூறுகையில்:- டார்ச் லைட் வெளிச்சத்தில் செய்த ஆபரேஷன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், மின்சாரம் தடை காரணமாக எங்கள் மாநிலத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.