தூத்துக்குடியில் நடந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்க முடியாத நிலையில் இருப்பது தான் மோடி அரசின் நான்கு ஆண்டு சாதனை என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் இன்று நடந்த திருமணம் ஒன்றில் எதிர்கட்சி தலைவரும், தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும் போது, '' நேற்று செய்தியாளர்கள் என்னிடம் 4 ஆண்டு பா.ஜ.க அரசு பற்றி கேட்டார்கள். அப்போது நான், தூத்துக்குடியில் நடந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்க முடியாத நிலையில் பிரதமர் இருக்கிறார். இது தான் அவருடைய மிகப்பெரிய சாதனை என்றேன்" என தெரிவித்துள்ளார். 


மேலும், "தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு மக்களிடத்தில் இந்த ஆட்சி மீது இன்னும் அதிகமான வெறுப்பு ஏற்பட்டு, இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற உணர்வோடு இருக்கின்ற நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் விசாரணை கமிஷனை பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கிறது.


இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது சிகிச்சையின்போது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரம் இது வெளியிடப்பட்டதற்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மூடிமறைக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகத்தான் தோன்றுகிறது" என்றார். 


இதை தொடர்ந்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், அவர் "தூத்துக்குடியில் 13பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக் கூட பதிவு செய்ய துப்பில்லாத அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.காவல்துறையை  காவி மயமாக்கும் முதல்வர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு" என்று தெரிவித்துள்ளார்!