தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முக்கியத்துவம் கருதி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.


இதையடுத்து, மாவட்ட போலீசார் இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.


இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக, மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்குவர்.


நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார், இதற்கான நடவடிக்கையை அடுத்த சில தினங்களில் மேற்கொள்ள இருக்கின்றனர்.


இந்நிலையில், இவ்விவகாரத்தில் நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக உயர்மட்ட விசாரணை குழுவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார். 


2 வாரங்களில் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அதிகாரி சந்தானம் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்.


அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான அந்த விசாரணைக்குழு மதுரை இன்று பேராசிரியையிடம் விசாரணை நடத்த உள்ளது.