மெரினாவில் காவிரி உண்ணாவிரதம் போராட்டம் நடக்குமா? ஐகோர்ட் தீர்ப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை மெரினாவில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று(ஏப்.,25) தீர்ப்பு அளிக்கிறது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள்கள், உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, மெரினாவில் போராட யாருக்கும் அனுமதி இல்லை' என, சென்னை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “காவிரி விவகாரத்தில் உரிமை கோருவதை விட மெரினா கடற்கரையை பராமரிப்பதுதான் முக்கியமா?” என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும், “போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு உரிமை உண்டு கட்டுப்படுத்த இல்லை” எனவும் கூறினர்.
இதையடுத்து, கடைசியாக, மெரினாவில் நடந்த போராட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தனர்.