நாளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சில விதிமுறை டிப்ஸ்!!
நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு வரும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன!
வரும் 7-ம் தேதி நாடு முழுதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருப்பவர்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை வெளி மாநிலங்களில் சென்று தேர்வு எழுத வேண்டும் என அறிவித்துள்ளனர்.
இதனால் தமிழக மாணவ-மாணவிகள் வெளிமாநிலத்திற்க்கு சென்று தேர்வு எழுத வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேலும், நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்திற்க்கு செல்லும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு பலர் உதவி கரம் நீட்டி உள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எதை கொண்டு வரலாம், எதை கொண்டு வரக் கூடாது என்பது குறித்து விதிகளை ஏற்கனவே சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
அதன்படி, நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு வரும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன!
,நீட் தேர்வு எழுத நாளை காலை 10 மணிக்கு வரும் மாணவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.
துண்டு பேப்பர்கள், பென்சில் பாக்ஸ், பர்ஸ், பேனா, ஸ்கேல், எழுதும் அட்டை, ரப்பர்கள், லாக் புத்தகம், ஸ்கேனர்கள் ஆகியவற்றை கொண்டு செல்லக் கூடாது.
கால்குலேட்டர், பென்டிரைவ், செல்போன், ப்ளூடூத், இயர்போன், மைக்ரோபோன், பேஜர் ஆகியவை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரைக்கை கொண்ட ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். முழுக்கை கொண்ட ஆடையை தவிர்க்க வேண்டும். அதே போன்று, அணியும் ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் இருக்கக் கூடாது.
மேலும், பிரேஸ்லெட், வாலட், கண்ணாடிகள், கைப்பை, ஹேண்ட்பேக், கைக்கடிகாரம், பெல்ட், தொப்பி, மோதிரம், கம்மல், மூக்குத்தி, செயின், பேட்ஜ் ஆகியவற்றை அணியக் கூடாது.
இந்த விதிகளை பின்பற்றாமல் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.