சிரியா அரசுக்கு எதிராக தொடர் தாக்குதல் வேண்டாம்: புதின் எச்சரிக்கை!!
சிரியா அரசுக்கு எதிராக அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்கும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு ரஷ்ய படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆசாத்தின் அரசு கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றன.
கடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன.
இந்நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் டமாஸ்கஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிரியாவும், ரஷ்யாவும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் ஹசன் ரஹானியை நேற்று டெலிபோனில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்.....!
அமெரிக்க கூட்டுப்படைகள் சிரியாவில் அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக கூறியிருப்பது, ஐ.நா.வின் விதிமுறைகளை மீறிய செயலாகும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் சிரியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதை தடுப்பதுடன், சர்வதேச அளவிலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
மேலும் சிரியா மீது தொடர் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதின் கூறியதை ஹசன் ரஹானியும் ஏற்றுக்கொண்டதாக கிரம்ளின் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.