மதுபான விவகாரம்: தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!
மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது!
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் தினமும் நடைபெறும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்தில் இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வக்கீல் கே.பாலு 2012ல் சென்னை ஐ கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐ கோர்ட் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றின் அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்றும் உத்தரவு பிரபித்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டு, கடைகளை திறக்கலாம் என கூறியது. தொடர்ந்து தமிழக அரசு மூடப்பட்ட ஆயிரத்து 700 மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்பு சாலைகளாக மாற்றாமல் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.