தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைந்துள்ளது. 1994-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996-ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை உற்பத்தியை தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், வருடத்திற்கு 12 இலட்சம் டன் கந்தக அமிலமும், 2 இலட்சத்து 20 ஆயிரம் டன் பாஸ்பாரிக் அமிலமும் தயாரிக்கப்படுகிறது.


இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டபோதே, தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை நடத்தினர் 


இந்த நிலையில், இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் அருகே மேலும் 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


இந்த விரிவாக்கப் பணிக்கு அந்த ஆலையை சுற்றியுள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த 70 மாணவ, மாணவிகளை பெற்றோர் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து தங்களது போராட்டத்தை தொடங்கினர்


இதனையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. 


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வலுத்து உள்ளது.


இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இதற்காக வ.உ. சிதம்பரனார் கல்லூரி வாசல் முன் திரண்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி போராட்டம் செய்து வருகின்றனர்.


இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் போராட்டத்திற்கு ஆதரவு எழுந்துள்ளது.