தூத்துக்குடியில் வரும் 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
தூத்துக்குடியில் வரும் 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு என மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. நேற்று மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தடை உத்தரவு மீறி போராட்டம் நடைபெற்றதால், வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த எந்தவித முன் அறிவிப்பும் இன்றி போலீசார் தூப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தூப்பாக்கி சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கு மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (மே 22) நிகழ்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, சட்டம் ஒழுங்கு காத்திட 23.5.18 பகல் 1 மணி முதல் 25.5.17 இரவு 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகள் மற்றும் வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், மிதிவண்டி, இருசக்கர வாகனம், நாங்கு சக்கர வாகனம் மூலம் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள பொதுமக்களை அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.