தமிழ் திரையுலகிற்கு பல மறக்க முடியாத திரைப்படங்களை கொடுத்தவர் சி.வி.ராஜேந்திரன். இவரின் மனைவி ஜானகி. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள்  உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரைப்படங்களான கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா உள்ளிட்ட வெற்றிப் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர்.


இவரது சொந்த ஊர் மதுராந்தகம் அருகேயுள்ள சித்தாமூர் ஆகும். இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த போது மீண்ட சொர்க்கம், கலைக்கோவில், கொடி மலர், நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். காதலிக்க நேரமில்லை படத்தின் போது அசோஸியேட் இயக்குநரானார். 


முத்துராமன், ராஜ ஸ்ரீ, டி.எஸ்.பாலையா நடித்த அனுபவம் புதுமை என்ற படம் தான் சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான முதல் படம் ஆகும். இந்தப் படம் 1967-இல் வெளிவந்தது. அந்தப் படத்தில்தான் முதன் முதலாக ஸ்லோமோஷன் காட்சிகள் அமைக்கப்பட்டன. ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான கதையை ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, விஜயலலிதா ஆகியோரை நடிக்க வைத்து இவர் இயக்கிய நில் கவனி காதலி என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


இவரது இயக்கத்தில் வெளிவந்த "சங்கிலி' திரைப் படத்தில் நடிகர் பிரபுவை அறிமுகம் செய்தார். கடந்த 1993- ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகள் நடிப்பில் விலகியிருந்த சிவாஜியை தனது சொந்தப் படமான "ஒன்ஸ்மோர்' படத்தில் நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் விஜய், சரோஜாதேவி, மணிவண்ணன், சிம்ரன் ஆகியோரும் நடித்திருந்தனர். 


இவர் சிவாஜியை கதாநாயகனாக வைத்தே சுமார் 20 படங்கள் எடுத்துள்ளார். தனது திரைப்படங்களில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் சி.வி. ராஜேந்திரன். அதனால் தான் "சுமதி என் சுந்தரி', "ராஜா', 'பொன்னூஞ்சல்' உள்ளிட்ட படங்களில் மறக்க முடியாத பல பாடல்கள் தமிழ் ரசிகர்களுக்குக் கொடுத்தார்.


இளையராஜா இசையில் "உல்லாசப் பறவைகள்' படம் சி.வி.ராஜேந்திரன் கை வண்ணத்தில் உருவான படமாகும். இதில் "தெய்வீக ராகம்', "நான் உந்தன் தாயாக வேண்டும்', ஜெர்மனியின் செந்தேன் மழையே', "அழகு ஆயிரம்' ஆகிய அனைத்துப் பாடல்களும் மறக்க முடியாதவை. 


மறைந்த சி.வி.ராஜேந்திரனின் மகன், மகள் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் வந்தவுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.