ஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.
கியோட்டோ: ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரபலமான தொலைக்காட்சி அனிமேஷன் தொடர்கள் மற்றும் படங்கள் தயாரிப்பதற்காக அறியப்பட்ட ஸ்டுடியோவில் சுமார் 70 பேர் பணியாற்றியதாக தெரிகிறது. அந்த ஸ்டுடியோவில் இன்று காலை 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தால் படுகாயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
அடையாளம் தெரியாத ஒரு நபர் காலையில் மூன்று மாடி கியோட்டோ அனிமேஷன் கோ ஸ்டுடியோவுக்குள் நுழைந்து எரிபொருள் போன்ற திரவத்தை சுற்றி தெளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 41 வயதுடைய நபரை காயங்களுடன் கைது செய்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். தீ விபத்து ஏற்ப்படுவதற்கு முன்பு பெட்ரோல் போன்ற ஒரு பொருளை வளாகத்தில் ஊற்றியதாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட அடுக்கு கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.