ஆப்கானிஸ்தானில் சுதந்திர தினத்தன்று தொடர் குண்டுவெடிப்பில் 66 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினத்தன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் பல பொது இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டன.
காபூல்: ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினத்தன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் பல பொது இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பில் 66 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என இதுவரை மொத்தம் 65 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் நகரத்தை 10 வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தியதற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த சந்தைக்கு அருகே ஜலாலாபாத்தில் வெடிகுண்டுகள் தாக்குதல் நடப்பட்டன. அதில் குறைந்தது 34 பேர் காயமடைந்தனர் என மூத்த சுகாதார அதிகாரி பாஹிம் பஷாரி தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் சமாதான ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா விவாதித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த தாக்குதல்கள் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.