ஆப்கான் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  தாலிபன்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதனிடையே ஐ.எஸ். அமைப்பினரும் அங்கு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் நேற்றிரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. இதில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.


இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுதொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில்., காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.


குறிப்பிட்ட இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவோ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை. கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காபுலில்  கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.