கடந்த மே மாதம் 19ம் தேதி 66 பயணிகளுடன் பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோ சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதனிடையே எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரின் அருகே விமான பாகங்கள் மிதப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் ஒருபகுதியாக ஆழம் நிறைந்த மத்திய தரைக்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டிருந்தனர் விசாரணை அதிகாரிகள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு கருப்பு பெட்டியில் இருந்து சமிக்ஞை வருவதை விசாரணை குழு பதிவு செய்தது. இந்த சமிக்ஞைகள் ஜூன் 24ம் தேதியுடன் முடிவுக்கு வரும் எனவும் அதன் முன்பு அந்த பெட்டியை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தனர்.


மேலும் விபத்துக்கு தீவரவாதிகள் கூட காரணமாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மாயமான எகிப்து விமானத்தின் பாகங்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து எகிப்து விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விமானத்தின் பாகங்கள் என உறுதிப்படுத்தக்கூடிய முக்கியமான பல பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடலுக்கடியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த கப்பல் ஒன்று விமானத்தின் பாகங்கள் என உறுதி செய்யப்பட்ட முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.