பயங்கரவாதி ஹபீஸ் சையத் உள்ளிட்ட 13 தலைவர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சையத். 


இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். மேலும் பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.


இந்நிலையில். மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் உள்ளிட்ட 13 தலைவர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.


இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


முல்தான், லாகூர் மற்றும் குஜ்ரான்வாலா ஆகிய பகுதிகளில் மொத்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது.


பயங்கரவாத செயல்களுக்கான நிதி பரிமாற்றத்தை தடுக்க வேண்டும் என பாகிஸ்தானை உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.