பாகிஸ்தான் பிரதமராக வரும் ஆகஸ்ட் 11-ஆம் நாள் பதவியேற்கவுள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானின் பொது தேர்தல் கடந்த ஜூலை 25-ஆம் நாள் நடைப்பெற்றது. இத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் எனப்படும் பிடிஐ கட்சி 116 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.


முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 64 இடங்களிலும், மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.


ஆட்சியை அமைக்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு 21 இடங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் சிறிய கட்சிகளுடனும், சுயேச்சை உறுப்பினர்களுடனும் பேச்சு நடத்தி வருவதாக பிடிஐ கட்சி தெரிவித்தது.


பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், பாக்கிஸ்தான் நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு முன்னர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்பார் என பிடிஐ கட்சி ஏற்கெனவே அறிவித்து இருந்த்து. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமராக, பெருன்பான்மை பலத்துடன் தான் பதவியேற்க உள்ளதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார்.


முன்னதாக தான் பிரதமராக பதவியேற்கும் பட்சத்தில் "நான் பிரதமர் மாளிகையில் இருக்கபோவது இல்லை. பிரதமர் வீட்டை கல்வித்துறை நிலையமாகவும், ஆளுநர் இல்லத்தை பொது இடமாகவும் பயன்படுத்துவோம். மற்ற ஆட்சியாளர்கள் நாட்டை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் மாளிகை, பங்களா, வெளிநாட்டு பயணங்கள் என வரி பணத்தை வீண்செலவு செய்தனர். ஆனால் நாங்கள் மக்களின் வரி பணத்தை வீண் செலவு செய்யாமல் முதலீடு செய்து பாதுகாப்போம். 


பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை நாட்டின் மிக பெரிய சவாலாக இருக்கிறது. எனவே அண்டை நாட்டுடன் எங்கள் உறவு ஆக்கபூர்வமாக இருக்கும். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இரு நாடுகளுக்கிடையே உறவு மேம்பட இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம்" என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்ககது.