மத்திய இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு 80 முறை அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ரோமிலும் கட்டிடங்கள் குலுங்கின. இது 20 வினாடிகளுக்கு நீடித்தது. அமாட்ரைஸ் என்ற சிறிய நகரமே நில நடுக்கத்தில் சின்னா பின்னமானது. நிலநடுகத்தினால் 38 பேர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. இதற்கிடையே பலரது சடலங்களை மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்தனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது.


368 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை உயிரிழந்தோரது எண்ணிக்கை 250 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று இரவு முழுவதும் உயிர் பிழைத்தவர்கள் நடு ரோட்டில் தங்கினார்கள். அப்போதும் நிலம் குலுங்கிக் கொண்டே இருந்தது. அப்போதும் 5.1 மற்றும் 5.4 ரிக்டர் அளவுக்கொண்ட பூமி அதிர்வு உணரப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.