பெண்கள் ட்ரம்ப்புக்கு ஓட்டுப் போடக் கூடாது- மிஷல் ஒபாமா!!
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் அமெரிக்கப் பெண்கள் ட்ரம்ப்புக்கு ஓட்டுப் போடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா.
டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி தவித்து கொண்டு வருகிறார். அவர் கடந்த 2005 ஆண்டு பெண்களைப் பற்றி மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அப்போது அவர் தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியானது அவருக்கு பெரும் சர்சையாக அமைந்தது. தற்போது தங்களிடம் டிரம்ப் தவறாக நடந்து கொண்டதாக 3 பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டிக்கான வேட்பாளரான டொனால்டு டிரம்ப் பெண்களை அவதூறாகப் பேசியதை மிஷல் ஒபாமா வன்மையாகக் கண்டித்துள்ளார்.
டிரம்பின் செயல் நாட்டுக்கே பெரும் அவமானத்தைத் தரக் கூடியது என்று மிஷல் ஒபாமா நியூஹாம்ஷயரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கூறினார்.