குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கூட்டணி அரசை உருவாக்க நேதான்யாஹூ தவறியதால் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரேல் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெஞ்சமின் நேதான்யாஹூ குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கூட்டணி அரசை உருவாக்க தவறியதால் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேலில் நடைப்பெற்ற பொது தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீண்டும் வெற்றி பெற்று இஸ்ரேல் பிரதமராக 5-வது முறை பொறுப்பேற்றார்.


சட்டப்படி மே 29-ஆம் தேதி நள்ளிரவுக்குள் பெஞ்சாமின் நேதான்யாஹூ இஸ்ரேலின் புதிய அரசை உருவாக்க வேண்டும். ஆனால் அவரால் திட்டமிட்டப்படி கூட்டணி அரசை உருவாக்க முடியவில்லை. இந்நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலில் 18 வயதான யூதர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இதில் அரேபியர்கள் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹாரேதி இஸ்ரேலியர்கள் என்றழைக்கப்படும் யூத மதத்தின் பழமைவாத கொள்கைகள் கொண்ட குழுவினருக்கும் இந்த சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது.  


ஆனால் பெஞ்சமின் நேதான்யாஹு அரசு பழமைவாத ஹரேதி இஸ்ரேலியர்களையும் ராணுவப் பணியில் சேர்க்கும் மசோதா ஒன்றை  அறிமுகம் செய்தது. இதற்கு ஹாரேதி இஸ்ரேலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


இந்நிலையில் இஸ்ரேலில் அரசு அமைக்கும் விஷயத்தில் இந்த மசோதா குறித்த விவாதம் நடைபெற்றது. மசோதா குறித்து இருதரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பெஞ்சமின் நேதான்யாஹூவால் கூட்டணி அரசை உருவாக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.