காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தியை குறிவைத்து ட்வீட் செய்த PAK அமைச்சர்
அரசியல் நிலைப்பாட்டில் மிகப்பெரிய குழப்பமாக இருக்கும் நீங்கள், ஒரு சரியான நிலைப்பாட்டை எடுக்கவும் என ராகுல் காந்தியை குறிவைத்து ட்வீட் செய்த பாகிஸ்தான் அமைச்சர்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு விவகாரம், அங்கு நடக்கும் வன்முறைக்கு காரணம் பாகிஸ்தான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட் செய்திருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானின் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ராகுல் காந்தியை குறிவைத்து ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, காஷ்மீர் பிரச்சனை குறித்து ராகுல்காந்தி ட்விட்டர் பக்கத்தில், நான் இப்போது இருக்கும் அரசுடன் பல்வேறு விஷயங்களில் முரண்பட்டு இருக்கிறேன். ஆனால், ஒரு விஷயத்தை நான் இப்போது தெளிவாக சொல்லிவிடுகிறேன். காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு பிரச்சனை. இந்த பிரச்சனையில் பாகிஸ்தான் தலையிடுவதற்கோ வேறு வெளிநாடுகள் தலையிடுவதற்கோ கொஞ்சமும் இடமில்லை. ஜம்மு காஷ்மீரில் வன்முறை நடக்கிறது. இந்த வன்முறை பாகிஸ்தான் மூலம் தூண்டப்பட்டு அவர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே தீவிரவாதத்தை ஆதரிக்கும் மிக முக்கியமான நாடு பாகிஸ்தான் தான் என்று கூறியுள்ளார்.
ராகுல்காந்தியின் கருத்தை அடுத்து, பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் உசேன் தனது ட்வீட்டர் பக்கத்தில், "அரசியலில் வாழ்க்கையில் உங்களுடைய (Rahul Gandhi) நிலைப்பாடு மிகப்பெரிய குழப்பமாக இருக்கிறது. யதார்த்தத்திற்கு நெருக்கமாக சென்று சரியான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும்.
இந்திய மதச்சார்பின்மை மற்றும் கருத்து சுதந்திரத்தின் அடையாளமாக இருக்கும் உங்கள் தாத்தா (பண்டிட் நேரு) போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.