மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட மியாமி நகரில் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் இந்த சாலையை கடப்பது கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து அந்த சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்துசெல்வதற்காக ஒரு சிறிய பாலம் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று அந்த 950 டன் எடையுள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.


அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். எட்டு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்நிலையில், இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறுகின்றனர்.