நாஜி பாணியில் பாலியல் வன்புணர்வு செய்யும் வீடுகளில் வெள்ளைக்கொடி - ரஷ்யா அட்டூழியம்
எந்தெந்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்பதை அடையாளப்படுத்த வீட்டின் வெளியே வெள்ளைக்கொடிகளை கட்டும்படி ரஷ்ய ராணுவ அதிகாரிகள் கட்டளையிட்டதாக உக்ரைன் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன.
குறிப்பாக, உக்ரைன் பெண்களை ரஷ்ய ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வீரர்களுக்கு பாலியல் உணர்ச்சிகளை அதிகரிக்கச்செய்யும் வயக்ரா மாத்திரைகளை ரஷ்யா ராணுவம் கொடுத்து, உக்ரைன் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக ஐநாவின் சிறப்பு பிரதிநியான பிரமிளா பட்டன் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும் படிக்க | வீரர்களுக்கு 'வயக்ரா'... பாலியல் வன்முறையை தூண்டிய ரஷ்யா - அதிர்ச்சி ரிபோர்ட்
இந்நிலையில், உக்ரேனிய பெண்களை தங்கள் வீடுகளுக்கு வெளியே வெள்ளை துணியை தொங்கவிடுமாறு ரஷ்ய அதிகாரிகள் உள்ளிட்ட படையினர் கட்டளையிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சக உக்ரைன் வீரர்கள் யாரை வன்புணர வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள முடியும் என்பதால் வெள்ளை துணியை கட்டும்படி கூறியுள்ளனர்.
போர்க்காலம் முழுவதும் உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரங்களில் பெண்களை பாலியல் வன்புணர்வு புரிய படைத்தளபதிகள் ஊக்குவித்து உத்தரவிடுகிறார்கள் என்று ரஷ்யாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவி வரும் பிரிட்டிஷ் கிரிமினல் வழக்கறிஞர் வெய்ன் ஜோர்டாஷ் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கிவ் அருகே உள்ள பெரெஸ்தியங்கா கிராமத்தைச் சேர்ந்த உக்ரேனியப் பெண் ஒருவர், ஒரு ரஷ்ய ராணுவ வீரர் தனது வீட்டிற்கு வெளியே ஒரு வெள்ளை துணியை தொங்கவிடுமாறு கட்டளையிட்டதை விவரித்ததாக கூறப்படுகிறது.
கியேவைச் சுற்றியுள்ள சில பகுதிகளில், ரஷ்ய துருப்புக்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையானது மிகவும் முறையாக திட்டமிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் உள்ளன எனவும் ஜோர்டாஷ் கூறினார்.
படையெடுப்பு தொடங்கி ஒன்பது மாதங்களில் விளாடிமிர் புடினின் தளபதிகளும் சிப்பாய்களும் பாலியல் வன்புணர்வை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்தினர் என்பதற்கு ரஷ்ய துருப்புக்கள் செய்த பாலியல் வன்முறையின் முறைப்படுத்தப்பட்ட தன்மை இன்னும் கூடுதலான ஆதாரங்களை வழங்குகிறது என்றும் கூறியுள்ளார்.
போரில் இப்படியான முறைப்படுத்தப்பட்ட பாலியல் வன்முறை பிரச்சாரங்கள் அனைத்தும், ஒரு தேசத்தை இனரீதியாக அழித்தொழிக்கவும், தலைமுறை தலைமுறையினரை உளவியல் ரீதியாக அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்கும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன.
போர்க்கால பாலியல் வன்புணர்வின் விளைவாகப் பிறக்கும் குழந்தைகள், இந்த கொடூர போரின் நினைவூட்டலாக மாறுவதால் பெரும்பாலும் அவர்கள் களங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
உக்ரைன் முழுவதிலும் உள்ள பெண்கள் கொடூரமான பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர். ரஷ்ய தளபதிகள் ஒரு முறைப்படுத்தப்பட்ட பாலியல் வன்முறை பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ