2-வது நேரடி விவாதம்: ஹிலாரியை சிறையில் தள்ளுவேன் டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்-ஹிலாரி கிளிண்டன் இடையேயான 2-வது நேரடி விவாதம் துவங்கியது.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே முதல் விவாத நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெற்றது. தற்போது அமெரிக்காவின் செயின்லூயிஸ் நகரில் 2-வது நேரடி விவாதம் துவங்கி உள்ளது. ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் 90 நிமிடங்கள் இருவரும் பதிலளிப்பார்கள்.
ஹிலாரி பேசியதாவது:- பெண்களை பற்றி மோசமாக சித்தரித்துள்ள டிரம்ப் அதிபராக தகுதியில்லாதவர். நாட்டுக்கா போரில் உயிர் இழந்த வீரர்களை டிரம்ப் அவமதித்தார். அவர் மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. அவர் யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை. ஆனால் அவர் அதிபராக தேர்வானால் அமெரிக்கா தான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.
டிரம்ப் பேசியதாவது:- பெண்களைப் பற்றிய அந்த அவதூறு பேச்சுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். பெண்கள் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறேன். பில் கிளிண்டன் பெண்களை தரக்குறைவாக நடத்தினார். எனக்கு தேர்தலை விட்டு விலகும் எண்ணம் இல்லை. அமெரிக்காவை பாதுகாப்பான நாடாக்குவேன். அதிபராக தேர்வானால் ஹிலாரியின் இ-மெயில் விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடுவேன். அவரை சிறையில் தள்ளுவேன் என கூறினார்.