தென் சீனக் கடல் விவகாரம்` வியட்நாமுக்கு சீனா மிரட்டல்
தென் சீனக் கடல் பகுதி தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அந்த வழக்கின் முடிவில் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமை இல்லை என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
சர்வதேச நீதிமன்றத்தின் இத் தீர்ப்பை ஏற்க மறுத்த சீனா தொடர்ந்து அப்பகுதியில் உரிமை கொண்டாடி வருவதோடு கடல் பகுதியில் சீனா தனது ராணுவ நிலைகளை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இப்பகுதி முழுவதையும் செயற்கைக் கோள் மூலம் காண்காணித்தும் வருகிறது.
இந்நிலையில், சீனாவின் விமான ஓடுபாதைகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து ராக்கெட் லாஞ்சர்களை தென் சீனக் கடல் பகுதியில் வியட்நாம் தமது உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நகர்த்தி வருகிறது.
தென் சீனக் கடல் பகுதியில் உள்ள 50 தீவுகளில் 29 தீவுகளை சட்ட விரோதமாக வியட்நாம் ஆக்கிரமித்துள்ளது என்றும் விமான ஓடுபாதைகள் அதில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சீனா வியட்நாம் மீது குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், வியட்நாம் ராக்கெட் லாஞ்சர்களை தென் சீனக் கடல் பகுதிக்கு நகர்த்தி வருகிறது. வியட்நாமின் இந்த நடவடிக்கையை தவறு என்றும் இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் கற்றதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வியட்நாமை சீன ஊடகம் மிரட்டியுள்ளது. மேலும் தென் சீனக் கடல் பகுதியில் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் மீது பிடியை இறுக்கவே வியட்நாம் இவ்வாறு செய்வதாக சீன ஊடகம் சாடியுள்ளது.