சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டினரை கண்டறியும் செயலில், நேபாளத்தில் 122 சீன ஆண்களையும் பெண்களையும் நேபாளம் காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் திங்கள்கிழமை தலைநகர் காத்மாண்டுவில் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.


மேலும் நேபாளத்தில் உள்ள சீனர்கள் சைபர் குற்றம் மற்றும் வங்கி பண இயந்திரங்களை ஹேக்கிங் செய்வது போன்ற குற்றங்களில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு வெவ்வேறு காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தலைவர் உத்தம் சுபேடி தெரிவித்தார். மேலும் அவர்களது பாஸ்போர்ட் மற்றும் மடிக்கணினிகள் முதலியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்., "குற்றச் செயல்களுக்காக சந்தேகிக்கப்படும் பல வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்படுவது இதுவே முதல் முறை" என்றும் குறிப்பிட்டார்.


மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரி ஹோபிந்திர பொகாட்டி இதுகுறித்து தெரிவிக்கையில்., சீனத் தூதரகம் இந்த சோதனைகள் பற்றி அறிந்திருப்பதாகவும், தடுப்புக்காவல்களை ஆதரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், இந்த வழக்கில் சீன மற்றும் நேபாளி காவல்துறையினர் ஒத்துழைத்துள்ளதாகவும், சீனா தனது அண்டை நாடுகளுடன் சட்ட அமலாக்க ஒத்துழைப்பை அதிகரிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


சீனாவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சீன மக்கள் ஆசிய நாடுகளில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம், உரிமம் பெறாத சூதாட்ட நடவடிக்கையில் நடத்தப்பட்ட சோதனையில் 342 சீனத் தொழிலாளர்களை பிலிப்பைன்ஸில் அதிகாரிகள் கைது செய்தனர்.


செப்டம்பர் மாதம், வங்கி பண இயந்திரங்களை ஹேக் செய்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஐந்து சீன நாட்டினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு கடத்தப்பட்ட தங்கத்துடன் சீன குடிமக்கள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


அக்டோபர் மாதம் ஜனாதிபதி ஜி ஜின்பிங் நேபாளத்திற்கு விஜயம் செய்தபோது குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் நேபாளமும் சீனாவும் கையெழுத்திட்டன. மேலும், சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் சீனா சமீபத்திய ஆண்டுகளில் நேபாளத்தில் தனது முதலீட்டை அதிகரித்து வருகிறது.


இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 134,000-க்கும் மேற்பட்ட சீன சுற்றுலாப் பயணிகள் நேபாளத்திற்கு வருகை தந்துள்ளனர், இது 2018-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியிலிருந்து 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நேபாள சுற்றுலா வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.