சிரியா போர்: கொத்துக்கொத்தாக மடியும் அப்பாவி பொது மக்கள்
சிரியா அரசுப் படையின் தொடர் தாக்குததால் கொத்துக்கொத்தாக மடியும் அப்பாவி மக்கள். சாப்பிட கூட வழியில்லாமல் குழந்தைகள் கதறல்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐஎஸ் தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
இதனால் அரசுப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சண்டை கடந்த ஐந்து நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. அதாவது அரசு ஆதரவுப் படையினர் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எப்படியாவது கிழக்கு கௌடா பகுதியை திரும்ப கைப்பற்ற வேண்டும் என்ற முடிவோடு அரசுப் படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக சிரியா இராணுவம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை குறைந்தபட்சம் 416 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2,100-க்கும் அதிகமானோர் படும் காயமடைந்துள்ளனர் என மனித உரிமைகளுக்கான போர் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
விமான தாக்குதல் மூலம் 400,000 குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு டஜன் மருத்துவமனைகள் சீரழிந்து உள்ளன. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை கூட செய்ய முடியவில்லை என தொண்டு மருத்துவகுழு கூறியுள்ளது.
உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் கிழக்கு கௌடா பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த தாக்குதல் கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமான தாக்குதல் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று செல்வதற்காக சண்டை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், சிரியாவில் ஒரு மாதம் வரை போர் நிறுத்தம் ஒப்பந்தம் கொண்டு வரவேண்டும் என்று ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானம் மீது தங்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்றும், இந்த தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டும் எனவும் ரஷ்யா தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தும், சுவீடனும் முன் மொழிந்த இத் தீர்மானத்தின்படி 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும். தீர்மானம் நிறைவேறிய 72 மணி நேரம் கழித்து தீர்மானம் அமலுக்கு வரும்.