சிரியா அரசு தினமும் 5 மணி நேரம் போரை நிறுத்த ரஷியா ஆணை!
சிரியாவில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆணை.
சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் தொடங்கிய சண்டை இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அதிபர் ஆதரவு படை நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த சம்பவத்தில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் எந்தப் பாவமும் அறியாத பட்சிலம் குழந்தைகள். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.
இதனிடையே சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்புதல் காரணமாக, சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களும், உணவுப் பொருட்களும் எளிமையாக சென்றடைய வழிவகுக்கும்.
ஆனால் போர் நிறுத்த தீர்மானம் ஐ.நாவில் நிறைவேறிய நிலையில் அதன் பின்பும் கிழக்கு கூட்டாவில் ரஷியா ஆதரவு படையுன் சிரியா ஆதரவு படைகள் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இப்போது போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தபோதிலும், அது எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்பது கேள்வியாகவே உள்ளது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போது இருந்தும் அமலுக்கு வரும் என்றும் தெரியவில்லை.இதை தொடர்ந்து, சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டுள்ளார்.