மெக்சிகோ நாட்டில் சட்டவிரோதமான ஒரு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக ருபென் நுனெஸ் என்ற ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர் போலீசார். அந்நாட்டின் பிரதான ஆசிரியர் சங்க தலைவரான அவரை விடுவிக்ககோரி ஆசிரியர் சங்கத்தை ஏராளமானோர் ஓக்சாக்கா மாநிலத்தில் சாலை மறியில் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து சில நாட்களாக நீடித்துவரும் இந்த சாலை மறியலால் மெக்சிகோ அரசுக்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லும் கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல இயலாத நிலை நீடித்தது. இதனால், பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையை இழுத்து மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.


இதைத் தவிர்க்க, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 120 டேங்கர் லாரிகளில் கச்சா எண்ணெய் அனுப்பி வைக்க அதிகாரிகள் தீர்மானித்தனர். அந்த லாரிகள் நோசிக்ஸ்ட்லான் சாலை வழியாக இன்று  வந்த போது மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கற்கள் மற்றும் தடிகளால் லாரிகளின்மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புக்கு உடன்வந்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்களில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. போலீஸ் தரப்பிலும் 20 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.