அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் பெரும் ஆபத்து -சீனா!
`பொருளாதார போர் வந்தால் அதில் யாரும் வெற்றி பெற முடியாது. அது அமெரிக்காவுக்கும் சம்பந்தப்பட்ட மற்ற நாடுகளுக்கும் பெரிய ஆபத்தாக முடியும்` என சீனா வர்த்தகத்துறை அமைச்சர் ஜாங் சேன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்தார். அவரது இந்த முடிவால் வர்த்தகப் போர் உருவானால் அது அனைவருக்கும் பெரும் ஆபத்து என சீனா எச்சரித்துள்ளது.
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மலிவான எஃகு பொருட்கள் அமெரிக்காவில் குவிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் அமெரிக்க எஃகு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அதை நிறுத்த இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். உலக நாடுகள் மட்டுமில்லாமல், டிரம்ப்பின் சொந்த ஆலோசகர்களே இந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர்.
இந்த முடிவை தொடர்ந்து பொருளாதார ஆலோசகர் கேரி கோஹன், தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா, அமெரிக்க பொருட்கள் மீது விதித்து வரும் வரியை கணிசமாக உயர்த்துவோம் என எச்சரித்த நிலையிலும், டிரம்ப் இந்த வரிகளை அமலுக்கு கொண்டு வந்தார்.
எஃகு மீது 25% வரியும், அலுமினியம் மீது 10% வரியும் கொண்டு வரப்பட்டது. இது அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே, வர்த்தகப் போரை உருவாக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்த போது, "பொருளாதார போர்கள் நல்லது தான். அதில் எளிதாக ஜெயித்து விடலாம்" என டிரம்ப் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் அமெரிக்காவுடனான பொருளாதார போர் பற்றி சீனா வர்த்தகத்துறை அமைச்சர் ஜாங் சேனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "பொருளாதார போர் வந்தால் அதில் யாரும் வெற்றி பெற முடியாது. அது அமெரிக்காவுக்கும் சம்பந்தப்பட்ட மற்ற நாடுகளுக்கும் பெரிய ஆபத்தாக முடியும்" என்றார்.