அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளருக்கு போட்டியிடுபவர்களில் ஒருவரான துளசி கம்பார்ட், மத வெறுப்புணர்வால் காரணம் இன்றி ஊடகங்கள் தன்னை விமர்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் துளசி கம்பார்ட் களம் காண்கிறார். அக்கட்சியின் சார்பில் ஹவாய் மாகாணத்திலிருந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சமீபத்தில், தான் மத வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதத்தை மையமாக வைத்து, காரணம் ஏதும் இன்றி ஊடகங்கள் தன்னையும், தனது ஆதரவாளர்களையும் விமர்சிப்பதாக குற்றம்சாட்டினார்.


இதுதொடர்பாக துளசி தெரிவிக்கையில்., இந்து மதத்தை சேர்ந்த அமெரிக்கராக நான், அமெரிக்க அதிபர் போட்டியில் இருப்பதில் பெருமை அடைகிறேன். ஆனால் மதத்தை மையமாக வைத்து, காரணம் ஏதும் இன்றி ஊடகங்கள் என்னையும், எனது ஆதரவாளர்களையும் விமர்சிப்பது வேதனை அளிக்கிறது. 


சமீபத்தில் இந்திய மக்களால் ஜனநாயக முறையில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியை சந்தித்தேன். இதன் காரணமாக தான் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறேன். 


முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், அதிபர் டிரம்ப்பும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மோடியை சந்தித்துள்ளனர். ஆனால் மற்ற தலைவர்களை விட்டுவிட்டு என்னை மட்டும் ஊடகங்கள் விமர்சிப்பது காரணம் அற்றது.


ஆசிய நாடுகளிலேயே இந்தியா தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நாடு. நாட்டிற்காக நான் செய்த பணியைக் கேள்வி கேட்பவர்கள், பிற மதத் தலைவர்களைக் கேள்வி கேட்க முன்வரவில்லை. அவர்களுடைய இந்த நிலைப்பாட்டிற்கும், மத வெறுப்புணர்விற்கும் காரணம், நான் இந்து; அவர்கள் இந்துகள் அல்ல என்பது தான் என தெரிவித்துள்ளார்.