துருக்கியில் பாராளுமன்ற ஜனநாயக முறை அமலில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருவான ராணுவ புரட்சியை அதிபர் தயீப் எர்டோகன் பொதுமக்கள் உதவியுடன் முறியடித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, அங்கு பாராளுமன்ற ஆட்சிமுறையை ஒழித்து விட்டு அதிகாரங்கள் குவிகின்ற அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர எர்டோகன் திட்டமிட்டார். 


மக்கள் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. அதில் 5 கோடியே 50 லட்சம் மக்கள் வாக்களித்தனர். 


மொத்தம் 99.45 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிபர் ஆட்சி முறைக்கு 51.37 சதவீதம் பேரும், பாராளுமன்ற ஆட்சி முறைக்கு 48.63 சதவீதம் பேரும் வாக்களித்து இருந்தனர். 


இதன் மூலம் துருக்கியில் அதிபரின் அதிகாரம் அதிக அளவில் கூடியுள்ளது. மேலும் தயீப் எர்டோகன் வருகிற 2029-ம் ஆண்டுவரை அதிபர் பதவியில் நீடிப்பார்.


எம்.பி. பதவிக்கான வயது வரம்பு 25-ல் இருந்து 18 ஆக குறைக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 550-ல் இருந்து 600 ஆக உயர்த்தப்படும்.


பொதுவாக்கெடுப்பு ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டதும் அதிபர் எர்டோகனின் ஆதர வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.


அதே நேரத்தில் குடியரசு மக்கள் கட்சி உள்ளிட்ட 2 எதிர்க்கட்சிகள் பொது வாக்கெடுப்பு முடிவை ஏற்க முடியாது என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. முத்திரையிடப்படாத வாக்கு சீட்டுகளையும் சேர்த்து வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். எனவே 60 சதவீதம் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.