வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா ஹேங்கிங் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக நடவடிக்கையை தொடங்கி உள்ள அமெரிக்கா முதல்கட்டமாக 35 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டு உள்ளது.
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க அரசியல் கட்சிகளின் இணையதளம் மற்றும் இ-மெயில்களை ஹேங்கிங் செய்து, தேர்தலில் தலையிட்டது தொடர்பாக ரஷிய அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு தடை விதித்து பாரக் ஒபாமா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டு உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகமாக வாக்கு பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை வெற்றி பெறச்செய்ததில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. 


ரஷிய அரசுடன் தொடர்புடைய தனி நபர்கள், ஹிலாரியின் ஜனநாயக கட்சி தேசிய குழு மற்றும் ஹிலாரி பிரசார குழு தலைவர் பிரசாரம் தொடர்பான ஆயிரக்கணக்கான இ-மெயில்களையும் திருடி விட்டனர் என்று ஹிலாரி குற்றம்சாற்றியுள்ளார்.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷிய அதிபர் புதினுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒபாமா அறிவித்தார். 


இந்நிலையில் வாஷிங்டன் மற்றும் சான் பிரான்ஸிகோவில் உள்ள ரஷிய தூதரகங்களில் பணியாற்றிய ரஷியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற மொத்தம் 72 மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
  
ரஷியாவிற்கு எதிராக அதிரடி தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள அதிபர் ஒபாமா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.