ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை உறுதி செய்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகனும் நியமிக்கப்பட்ட வாரிசுமான ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தியதாக செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அவர் சார்பில் அமெரிக்க அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில்; ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டது அல்கொய்தா அமைப்பிற்கு பின்னடவை மட்டுமின்றி, அந்த இயக்கத்திற்கும் பெருத்த சரிவை உண்டாக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த போது, பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. இதன் பின்னர் அல் கொய்தா இயக்கத்திற்கு பின் லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் தலைமை பொறுப்பை ஏற்றார். 30 வயதான அவர், அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுமாறு அல்கொய்தா அமைப்பினருக்கு ஆடியோ செய்திகள் மூலமாக தகவலை பரிமாறி வந்தார். இதனால் அவரது தலைக்கு ஒரு மில்லியன் டாலர்களை பரிசுத் தொகையாக அமெரிக்க அரசு அறிவித்து இருந்தது.


இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற விமான தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அறிவித்துள்ளது. பின்லேடனின் 20 குழந்தைகளில் ஹம்சா பின்லேடன் 15-வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.