அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றபோது, வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்துப் பேசினார். அப்போது இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.


இந்நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுதொடர்பாக அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான முதன்மை துணை செயலர் ஆலிஸ் வெல்ஸ் தெரிவிக்கையில்... "இந்தியாவின் அழைப்பை ஏற்று அதிபர் டொனால்டு டிரம்ப் குடியரசு தின விழாவில் பங்கேற்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதிபரின் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் குறித்தும் பரிசீலனை நடைப்பெற்று வருகிறது. இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாவிட்டாலும், இந்தியாவுக்கு டிரம்ப் வருவது உறுதி. இந்தியாவிற்கான பயண விபரங்கள் இறுதி செய்யப்பட்ட பின் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.


அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், வரும் குடியரசு தின விழாவானது ஆளும் பாஜக ஆட்சியின் இறுதி குடியரசு தின விழா ஆகும். எனவே இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிகர் டிரம்ப் பங்கேற்க வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.