இனி பெண்கள் தொழில் துவங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை!
பெண்கள் தொழில் துவங்க ஆண்களின் அனுமதி இனி தேவையில்லை என சவுதி அரேபியா நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது, அங்கு 22 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். இதை, 2030-குள் மூன்றில் ஒரு பங்காக உயர்த்த முடிவு செய்துள்ளார்.
அதற்காக பல மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.சவுதி விமான நிலையங்களில், பெண்களுக்கென்றே, 140 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பணிபுரிய, ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சவுதி பெண்கள், வாகனங்கள் ஓட்ட, பல ஆண்டுகளாகவே அங்கு தடை இருந்தது. சமீபத்தில், அந்த தடை நீக்கப்பட்டது.
இந்த வரிசையில், சவுதிப் பெண்கள், புதிதாக தொழில் துவங்க வேண்டுமானால், அதற்கு, தந்தை, கணவர் அல்லது சகோதரன் என, யாராவது ஒரு ஆண் உறவின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக சட்டம் இருந்தது. இனி, ஆண்களின் அனுமதி இன்றி, பெண்கள் தொழில் துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.