நாட்டில் 13 மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இது பற்றி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், வானிலை ஆய்வு மைய அறிக்கை குறித்து கூறியதாவது:- ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேச மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சில குறிப்பிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழையோடு பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் அசாம், மேகாலயம், நாகாலாந்து, மணிப்பூர், மிஸோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர, ஹரியாணா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழையோடு பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ராஜஸ்தானில் இடியுடன் கூடிய மழையோடு, புழுதிப் புயலுக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் டெல்லி, சண்டிகர், அரியானா, மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த புயல் தாக்கியது. தலைநகர் டெல்லி, சண்டிகரை நேற்று நள்ளிரவு புயல் தாக்கியது. டெல்லி பல பகுதிகளில் இடி, மிண்டலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டதால் டெல்லி மாநகரம் இருளில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் கன மழை பெய்து வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, டெல்லியில், இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் ரயில் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 90 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசினால், மெட்ரோ ரயில் பிளாட்பார்மில் நிறுத்திவைக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
20 மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
A tree fell down in the Delhi Cantt area after a dust storm hit #Delhi & adjoining NCR areas including Rohtak, Bhiwani, Jhajjar, Gurugram, Baghpat, Meerut & Ghaziabad. pic.twitter.com/KYDy8jmvzW
— ANI (@ANI) May 7, 2018