தங்கம் என்றென்றும் ஒரு சிறந்த முதலீடு மட்டுமல்ல, சேமிப்பிற்குமான சிறப்பான வழியுமாகும். அதனால் தான் தனிநபர்கள் முதல் நாட்டின் மத்திய வங்கிகள் வரை அனைத்துமே சேமிப்புக்காக தங்கத்தை வாங்குவது வழக்கம். அதிலும், தனிநபர்கள் பணம் இருந்தால் தான் தங்கம் வாங்க முடியும் என்றால், ஒவ்வொரு நாடும், தங்கள் அந்நிய செலாவணியின் ஒரு பகுதியை தங்கமாக வைத்திருக்க வேண்டும்.
பாதுகாக்கப்படும் தங்கம்
மக்கள் தங்கள் தங்கத்தை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பார்கள். ஆனால், ஒரு நாடு தனது தங்க இருப்பை எங்கே பாதுகாப்பாக வைக்கும் என்று தெரியுமா? சில நாடுகள் தங்களின் தங்கத்தை பிற நாடுகளிடம் பாதுகாப்பாக வைக்கின்றன. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.
தங்க இருப்பு
இந்தியா தனது தங்க இருப்பை இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் பாதுகாப்பாக வைத்துள்ளது. தனிநபர்கள், லாக்கர் பயன்படுத்துவதற்காக வங்கிக்குக் கட்டணம் செலுத்துவதைப் போல, ஒரு நாடு தனது தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக கட்டணங்களை செலுத்துகிறது. அந்த வகையில், இந்தியாவும் தனது தங்கத்தை பாதுகாப்பதற்காக பிற நாடுகளுக்கு கட்டணம் கொடுக்கிறது.
ஆனால், தற்போது இந்தியா வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதிலும், 1991 க்குப் பிறகு முதன்முறையாக, இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி இந்தியாவிற்கு கொண்டு வரும் பணியைத் தொடங்கிவிட்டது.
தங்கம் கொள்முதல்
33 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ரிசர்வ் வங்கி 100 டன் தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளில் இருந்து தனது கையிருப்புக்கு மாற்றியுள்ளது. இந்தத் தங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர பல சம்பிரதாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்புடன் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் தங்கத்தில் பாதிக்கும் மேற்பட்டவை வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் தங்கத்தில் பாதிக்கும் மேற்பட்டவை பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆஃப் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட் ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன, மூன்றில் ஒரு பங்கு தங்கம் உள்நாட்டிலேயே சேமிக்கப்படுகிறது.
சேமிப்பதற்கான கட்டணங்கள் குறையும்
பிற நாட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தியத் தங்கத்தை திரும்பப் பெறும் மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியாவின் செலவு குறையும். பாங்க் ஆஃப் இங்கிலாந்துக்கு செலுத்தப்படும் கட்டணங்கள் குறையும்.
இந்தியாவின் தங்க கையிருப்பு
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் 31, 2024இல் 822.10 டன் தங்கம் இந்திய அரசின் அந்நிய செலாவணி கையிருப்பாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வைத்திருந்த 794.63 டன்களை விட அதிகமாகும்.
1991ல் அடகு வைக்கப்பட்ட தங்கம்
1991 ஆம் ஆண்டில், அப்போது ஆட்சியில் இருந்த சந்திரசேகர் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தங்கத்தை அடகு வைத்தது. 1991 ஜூலை 4 மற்றும் 18க்கு இடையில், 46.91 டன் தங்கத்தை பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பாங்க் ஆஃப் ஜப்பான் ஆகிய வங்கிகளிடம் அடமானம் வைத்து $400 மில்லியன் தொகை திரட்டப்பட்டது.
2009ல் 200 டன் தங்கம் கொள்முதல்
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 200 டன் தங்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி கொள்முதல் செய்தது. 2009 ஆம் ஆண்டு, UPA அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்தியா தனது சொத்துக்களை வேறுபடுத்துவதற்காக $6.7 பில்லியன் மதிப்புள்ள 200 டன் தங்கத்தை வாங்கியது. கடந்த சில ஆண்டுகளாக, தங்கத்தை வாங்கிவரும் ரிசர்வ் வங்கி, தனது தங்க இருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்கம் வாங்குவதன் நோக்கம்
தங்கத்தை மத்திய ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருப்பதன் நோக்கம், பணவீக்கம் மற்றும் அன்னியச் செலாவணி அபாயங்களை எதிர்கொள்வதற்காகத் தான். அந்நியச் செலாவணி சொத்துக்களின் அடிப்படையைப் பன்முகப்படுத்துவதே அரசின் முதன்மையான நோக்கம் ஆகும். டிசம்பர் 2017 முதல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து சந்தையில் இருந்து தங்கத்தை வாங்கத் தொடங்கியது.
தங்க கையிருப்பு ஓராண்டில் 1% அதிகரிப்பு
நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு டிசம்பர் 2023 இன் இறுதியில் 7.75 சதவீதத்திலிருந்து ஏப்ரல் 2024 இறுதிக்குள் சுமார் 8.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் சேமிக்கப்பட்டிருக்கும் தங்கம் மும்பையில் உள்ள மின்ட் சாலையிலும், நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கட்டிடத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 2029க்குள் UPI சேவைகளை 20 நாடுகளுக்கு விரிவாக்க ஆர்பிஐ திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ