PPF vs VPF vs ELLS Mutual Funds: எதில் அதிக வருமானம், வரி விலக்கு? முழு ஒப்பீடு இதோ

PPF vs VPF vs ELLS Mutual Funds: அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை மட்டும் தான் இபிஎஃப்-இல் வழங்க முடியும். ஆனால், VPF -இல் முதலீடு செய்வதற்கு வரம்பு இல்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 1, 2023, 11:22 PM IST
  • இந்தியாவில் 42 மியூசுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வரி சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றன.
  • ஒவ்வொரு நிறுவனமும் முதலீட்டாளர்களுக்கு வருமான வரியைச் சேமிக்க உதவும் வகையில் ELSS திட்டத்தைக் கொண்டுள்ளது.
  • ELSS மியூசுவல் ஃபண்டை ஆன்லைனில் அல்லது ஒரு முகவரிடமிருந்து வாங்கலாம்.
PPF vs VPF vs ELLS Mutual Funds: எதில் அதிக வருமானம், வரி விலக்கு? முழு ஒப்பீடு இதோ title=

PPF vs VPF vs ELLS Mutual Funds: வேலையில் சேர்ந்து ஆரம்ப ஆண்டுகளில், மக்கள் ஓய்வூதியத் திட்டத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சில வருடங்களுக்குப் பிறகு இதை பற்றி யோசிக்கலாம் என பலர் நினைப்பதுண்டு. ஆனால், எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு ஓய்வு நேரத்தில் அதிகப் பணம் குவியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல வருமானத்தை அளிக்கும் பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. இவை வரி சலுகைகளையும் வழங்குகின்றன. தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF), ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவற்றில் முதலீடு செய்வது உங்களுக்கு வருமானத்தையும் வரிச் சலுகைகளையும் அளிக்கும். இந்த பதிவில், இந்த 3 திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களை காணலாம். 

தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF)

அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை மட்டும் தான் இபிஎஃப்-இல் வழங்க முடியும். ஆனால், VPF (Voluntary Provident Fund) இல் முதலீடு செய்வதற்கு வரம்பு இல்லை. அதாவது, ஊழியர் தான் கையில் வாங்கும் சம்பளத்தை குறைத்து வருங்கால வைப்பு நிதிக்கான தனது பங்களிப்பை அதிகரித்தால், அந்த விருப்பம் VPF எனப்படும். இபிஎஃப் (EPF) -ஐப் போலவே, VPF-யிலும் ஒருவர் 8.1 சதவீத வட்டியைப் பெறுகிறார். VPF திட்டம் என்பது EPF இன் விரிவாக்கமாகும். வேலை செய்பவர்கள் மட்டுமே இதை தேர்வு செய்ய முடியும். ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100 சதவீதத்தை கூட இதில் டெபாசிட் செய்யலாம். 

VPF -க்கு என்ன செய்ய வேண்டும்?

- உங்கள் நிறுவனத்தின் HR அல்லது நிதிக் குழுவை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.

- உங்கள் சம்பளத்தில் இருந்து VPFக்கான பங்களிப்பை அதிகரிக்குமாறு அவர்களிடம் கோர வேண்டும்.

- இது செயலாக்கப்பட்டவுடன், உங்கள் EPF கணக்குடன் VPF இணைக்கப்படும்.

- உங்களுக்கு தனி VPF கணக்கு தேவையில்லை. VPF பங்களிப்பு ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்படலாம்.

- இருப்பினும், VPF இல் முதலீடு செய்ய முதலாளி கடமைப்பட்டிருக்கவில்லை. பணியாளர் தனது பங்களிப்பை மட்டுமே அதிகரிக்க முடியும்.

VPF பற்றி இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

- நீங்கள் வேலையை மாற்றினால், இந்தக் கணக்கை எளிதாக மாற்றலாம்.

- VPFல் கடன் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி, வீட்டுக்கடன் மற்றும் குழந்தைகளின் திருமணத்திற்கும் கடன் பெறலாம்.

- VPF கணக்கிலிருந்து பகுதி அளவு தொகையை திரும்பப் பெறுவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் 5 ஆண்டுகள் பணியாற்றுவது அவசியம்.

- 5 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், வரி பிடித்தம் செய்யப்படுகிறது.

- VPF இன் முழுத் தொகையும் ஓய்வு பெறும்போது மட்டுமே திரும்பப் பெற முடியும்.

- VPF வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனைப் பெறுகிறது.

முதலீடு, வட்டி மற்றும் முதிர்வு (EEE) மீது பெறப்படும் பணம் முற்றிலும் வரி விலக்கு உண்டு. இந்த திட்டம் ஓய்வூதிய திட்டமிடலுக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க | உங்கள் நிறுவனம் பிஎஃப் பணத்தை கணக்கில் டெபாசிட் செய்கிறதா? செக் செய்வது அவசியம், இப்படி செய்யலாம்

ELSS- ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (Equity Linked Savings Scheme)

இந்தியாவில் 42 மியூசுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வரி சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் முதலீட்டாளர்களுக்கு வருமான வரியைச் சேமிக்க உதவும் வகையில் ELSS திட்டத்தைக் கொண்டுள்ளது. ELSS மியூசுவல் ஃபண்டை ஆன்லைனில் அல்லது ஒரு முகவரிடமிருந்து வாங்கலாம்.

வருமான வரியைச் சேமிக்க, ஒரு முறை முதலீட்டு வரம்பு குறைந்தபட்சம் ரூ. 5,000 ஆகும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய விரும்பினால், மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 500 முதலீடு செய்யலாம். ELSS முதலீட்டின் கீழ், அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், ELSS இல் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை.

வட்டி இல்லை, சந்தை இணைக்கப்பட்ட வருமானத்தைப் பெறுவீர்கள்

- இத்திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு லாக்-இன் உள்ளது. பின்னர், முதலீட்டாளர் விரும்பினால் பணத்தை எடுக்கலாம்.

- முதலீட்டாளர் விரும்பினால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக திரும்பப் பெறலாம்.

- பகுதியளவு திரும்பப் பெறுவதற்கான விருப்பமும் உள்ளது.

- மீதமுள்ள பணத்தை நீங்கள் விரும்பும் வரை திட்டத்தில் வைத்திருக்கலாம்.

- ELSS இன் சிறப்பு என்னவென்றால், முதலீட்டின் மீதான வட்டிக்கு பதிலாக, நீங்கள் சந்தையுடன் தொடர்புடைய வருமானத்தைப் பெறுவீர்கள்.

- கடந்த 10 ஆண்டுகளில், ELSS மியூச்சுவல் ஃபண்ட் வகை சுமார் 8.5 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund - PPF)

இந்தத் திட்டத்தை வங்கி அல்லது தபால் நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் திறக்கலாம். எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கும் இதை இடமாற்றம் செய்யலாம். இந்த கணக்கை திறக்க வெறும் ரூ.500 மட்டும் போதும். ஒவ்வொரு ஆண்டும் ஒரே நேரத்தில் 500 ரூபாய் டெபாசிட் செய்வது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை கணக்கில் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்கானது. ஆகையால், இடையில் பணத்தை எடுக்க முடியாது. ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். கடன் மற்றும் பகுதி திரும்பப் பெறுவதில் விலக்கு உண்டு. 15 ஆண்டுகளுக்கு முன்பு PPF ஐ மூட முடியாது, ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கணக்கில் கடன் பெறலாம். உறுப்பினர்கள் விரும்பினால், 7வது ஆண்டிலிருந்து இந்தக் கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம். ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். தற்போது 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டத்தின் 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்கின் பலன் கிடைக்கும்.

இவற்றில் எதில் முதலீடு செய்வது சிறந்தது

- மூன்று விருப்பங்களிலும் முதலீட்டிற்கு வரி விலக்கு பெறும் வசதி உள்ளது.

- ஆனால், மூன்று திட்டங்களும் வெவ்வேறு பலன்களைக் கொண்ட திட்டங்கள்.

- நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் VPFல் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.

- ஏனெனில் இதில் நீங்கள் PPF மற்றும் ELSS ஐ விட அதிக வட்டி பெறுவீர்கள்.

- அதே நேரத்தில், நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால், ELSS ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

- அதே நேரத்தில், நீங்கள் சந்தை அபாயத்திலிருந்து விலகி இருக்க விரும்பினால், PPF இல் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுக பரிந்துரைக்கிறோம்.)

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு காத்திருக்கிறதா? 8வது சம்பள கமிஷன்.. நிதிச் செயலாளர் அளித்த அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News