cell அரிக்கும் கல்வி: ஆசிரியரின் எச்சரிக்கைப் பகிர்வு

கற்பித்தலை எளிதாக்குகின்றோம் என்னும் பெயரில் கல்வி என்னும்  கட்டமைப்பையே கரைத்துக் கொண்டிருக்கின்றோமோ என்னும் பெரும் கேள்வி எழுந்திருக்கின்றது.

Written by - K.Nagappan | Last Updated : Apr 4, 2022, 03:33 PM IST
  • தொழில்நுட்பங்கள் மாணவனின் நிலை அறியாது
  • கட்டிடங்கள் கல்வி தராது
  • கணிப்பொறிகள் சிரிக்காது
cell அரிக்கும் கல்வி: ஆசிரியரின் எச்சரிக்கைப் பகிர்வு  title=

நம் ஆறாம் விரலாய் செல்போன் மாறி வரும் காலமிது. தொழில்நுட்பப் புரட்சி என்று இதனை வரவேற்றாலும் சில தருணங்களில் அது தேவையில்லாத ஆணிதான். இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து cell அரிக்கும் கல்வியின் நிலையை வேதனையுடன், எச்சரிக்கையுடன் பகிர்ந்தார் எழுத்தாளரும், ஆசிரியருமான சிகரம் சதிஷ். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

''செல்போனுடன் பள்ளிக்குள் செல்லாதீர்கள் என்ற நிலைமாறி, செல்போன் இல்லாமல் பள்ளிக்குள் நுழையாதீர்கள் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர் ஆசிரியர்கள். அத்தியாவசியத்திற்கு அலைபேசி என்கிற நிலைமாறி, அலைபேசியே அத்தியாவசியம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோமோ என்கிற அளவில் ஆசிரியர்களின் சுதந்திரம் அலைபேசிக்குள் அடமானம் வைக்கப்பட்டு விட்டது. ஆசிரியர்களின் காலை நேர உற்சாகம் மாணவர்களோடு கரைய வேண்டும். ஆனால் செயலிகளுடன் போராடியே, ஆசிரியர்கள் செயலிழந்து போய்விடுவார்களோ என்னும் பேரச்சம் எழத் தொடங்குகிறது.

கற்பித்தலை எளிதாக்குகின்றோம் என்னும் பெயரில் கல்வி என்னும்  கட்டமைப்பையே கரைத்துக் கொண்டிருக்கின்றோமோ என்னும் பெரும் கேள்வி எழுந்திருக்கின்றது. தொழில்நுட்பங்கள் என்பவை உணவில் பயன்படுத்தப்படும் உப்பாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, உப்பையே உணவாக்க முயன்றால் என்ன நிலை ஏற்படுமோ?  அதனை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றோம்

கல்வி என்பது உளவியல் சார்ந்தது. அதனால்தான் ஆசிரியர் பணி சார்ந்த படிப்புகளில் உளவியல் பாடங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன. ஆனால், ஆசிரியர்களின் உளவியலைச் சிதைக்கும் வண்ணம், அடுத்தடுத்த நகர்வுகள் அமைவது கல்வியின் ஆணிவேரை அசைத்துப்பார்க்கும் முயற்சியாகவே கருத வேண்டியிருக்கிறது. மாணவர்களிடம் கேள்வி கேட்கப் பழக்கும் ஆசிரியர்கள் எந்தக் கேள்வியும் தங்களிடம் கேட்கக்கூடாது என்னும் மனப்பான்மையுடனே உயர்மட்ட அதிகாரிகளின் உத்தரவுகளும், செயல்பாடுகளும் இருக்கின்றன. ஆயிரம் தொழில்நுட்பங்கள் வந்தாலும், ஓர் ஆசிரியரின் கற்பித்தலுக்கு இணை ஏதுமில்லை என்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆனால், அதிகாரிகளின் உத்தரவோ தொழில்நுட்பங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றது.

முதல்வரின் தனிச்செயலரான உதயச்சந்திரன் குறிப்பிட்டதைப் போல எதைச் சொன்னாலும், எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், எல்லாவற்றுக்கும் தலை ஆட்டும் இனமாக ஆசிரியர் இனம் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்பதை இங்கே கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆசிரியர்களைப் போலவே இடையில் இருக்கும் அலுவலர்களும் மன உளைச்சலோடுதான் இருக்கின்றனர் என்பதை அவர்களுடன் உரையாடும்போது அறியமுடிகிறது.

மேலும் படிக்க |  மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டணச் சலுகை நிராகரிப்பு; அமைச்சரின் பதில் குரூரமானது: சு.வெங்கடேசன் எம்.பி.

ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஆசிரியர்களின் கருத்தைக் கேட்பது அவசியம். குறைந்தபட்சம் அதிகாரிகளின் கருத்தைக் கேட்பதாவது அவசியமாகும். இதில் எதுவும் நடக்காமல், விளைவுகளைப் பற்றிய பார்வை இல்லாமல்,தொடர்ந்து திட்டங்களை அளிப்பதும்,  புள்ளிவிவரங்களைக் கேட்பதுமாகவே இருந்தால் ஆசிரியர்கள் எப்படி உற்சாகமான மனநிலையில் மாணவர்களைச் சந்திக்க முடியும். ஆசிரியர்களைக்  குற்றவாளிகளாகக் காட்டக்கூடிய மனோபாவம் இன்றைக்குப் பெருகி வருகிறது. இது தொடர்ந்தால் மாணவர்களிடம் நல்லொழுக்கம் என்பது அறவே இருக்காது. கண்டிக்கும் ஆசிரியரைத் திருப்பி அடிக்கும் மனநிலைக்கு மாணவர்களை உருவாக்கி இருக்கிறது இன்றைய கல்வி முறை.

கட்டிடங்கள் கல்வி தராது. கணிப்பொறிகள் சிரிக்காது. தொழில்நுட்பங்கள் மாணவனின் நிலை அறியாது. மாணவர்களின் பிரச்சினைகளை உணர செயலிகளுக்கு உணர்வுகள் கிடையாது. புள்ளிவிவரங்கள் தேவைதான். ஆனால் புள்ளி விவரங்களுக்கு ஆசிரியர் தேவையா? மேற்கண்ட இவைதான் கல்வியின் முன்னேற்றம் எனக் கருதி, ஆசிரியர்களை மதிக்க மறுக்கும் மனப்பான்மையை எதைக் கொண்டு சரிசெய்வது?

இதனைப் படிக்கும் எல்லோரிடமும் ஒரு கேள்வி. தன்னிடம் படிக்கும் மாணவனுக்கு என்ன தேவை என்று ஓர் ஆசிரியரை விட, வேறு யாருக்குத் தெரிந்துவிடும்? தனது குழந்தையின் குற்றங்களை வெறுக்கும் தந்தைதான் நல்ல தந்தையாக இருக்க முடியும். தனது மாணவனின் தவறுகளைத் திருத்தும் ஆசிரியர்தான் நல்ல ஆசிரியராக இருக்க முடியும். ஆசிரியர்கள் கண்டிப்பதைக்கூட, தண்டிப்பதாகப் பார்க்கத் தொடங்கிய பிறகுதான் எல்லாப் பிரச்சினைகளும் இங்கு எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டன.

4 பேர் உள்ள வீட்டிற்கே, இரண்டு கழிப்பறைகளை வைத்து வீடு கட்டுகின்றோம். பலநூறு மாணவ மாணவியர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு ஒன்றோ ,இரண்டோ என்றிருக்கும் கழிப்பறைகள் எப்படிப் போதும்? ஒரு கட்டிடம் கட்டும்பொழுது, 16 mm, 20 mm என கம்பிகளைக் கொண்டு எவ்வளவு உறுதியாக அடித்தளமிடுகின்றோம். ஆனால் கல்வி என்னும் கட்டமைப்பின் அடித்தளமான தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒருவராவது இருக்க வேண்டும்தானே!

தொடக்க நிலைகளில் வகுப்பிற்கு 10 மாணவர்கள் என்றால் கூட, ஒரே ஆசிரியர்தான் 5 பாடங்களையும் கற்பிக்கின்றார். இரண்டு ,மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரு ஆசிரியரே பாடம் நடத்துகின்றார் என்றால் 15 பாடங்களையும் ஒருவரே எப்படிக் கையாள்வார்? சற்றே சிந்தியுங்கள்.. வகுப்புக்கு அல்லது பாடத்திற்கு ஒரு ஆசிரியர், அனைத்துப் பள்ளிகளிக்கும் குடிநீர் வசதி, தண்ணீர் வசதியுடன் கூடிய போதிய கழிப்பறைகள்... இவற்றை மட்டும் தந்துவிட்டு, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை மட்டும் கொடுத்துப் பாருங்கள்.. அப்புறம்தான் கல்வியின் நோக்கம் நிறைவேறும்''.

இவ்வாறு ஓர் அர்த்தமுள்ள யோசனையைக் கூறியுள்ளார் ஆசிரியர் சிகரம் சதிஷ். அரசு நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

மேலும் படிக்க |  கியாஸ் சிலண்டருக்கு போஸ்டர் ஒட்டி கண்ணீர் அஞ்சலி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News